போர் நிறுத்தத்தை அமல்படுத்த தயாராகும் ஹமாஸ்
எந்தவொரு தரப்பினருடனும் புதிய நிபந்தனைகளின்றி போர் நிறுத்ததை அமல்படுத்துவதற்குத் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்காவின் முந்தைய முன்மொழிவுகளின் அடிப்படையில் காசாவில் இஸ்ரேலுடன் உடனடி போர் நிறுத்ததை அமல்படுத்துவதற்குத் தயார் நிலையில் இருப்பதாக ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, பாலஸ்தீனின் சிரேஷ்ட அதிகாரி கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழு கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) மற்றும் எகிப்தின் உளவுத்துறைத் தலைவர் அப்பாஸ் கமெல் (Abbas Kamel) உள்ளிட்ட மஸ்தியஸ்தர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் காஸாவின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மாத கால போர் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்துள்ளன.
இந்நிலையில், இன்னும் சில நாட்களில் விரிவான போர் நிறுத்த முன்மொழிவுகள் முன்வைக்கப்படும் என மத்திய புலனாய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் அமெரிக்கத் தலைமை பேச்சுவார்த்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.