இரண்டு சிறார்கள் உட்பட நால்வர்... கனடாவில் துயர சம்பவம்
கனடாவின் ஹாமில்டன் பகுதியில் குடியிருப்பு ஒன்று தீவிபத்தில் சிக்கியத்தில் இரண்டு சிறார்கள் உட்பட நால்வர் மரணமடைந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
ஹாமில்டன் பகுதியில் டெர்பி தெருவில் வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் குடியிருப்பு ஒன்று தீவிபத்தில் சிக்கியதாக பொலிசாருக்கு தகவல் சென்றுள்ளது.
இதனையடுத்து பொலிசாரும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பகுதி முழுவதும் கண்ணை மறைக்கும் வகையில் புகை சூழ்ந்திருந்துள்ளது.
மேலும், அந்த குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் மக்கள் சிக்கியிருக்கலாம் எனவும் தீயணைப்பு வீரர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, கரும்புகை, கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஹாமில்டன் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் இரண்டாவது தளத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த நிலையில், 6 பேர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு சிறார்கள் உட்பட நால்வர் மரணமடைந்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய இருவரும் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரும்புகை காரணமாக அப்பகுதி மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஒன்ராறியோ அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் உள்ளிட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.