``நீங்கள் இதைப் படிக்கும்போது நான் இறந்திருப்பேன்" - கேன்சரால் இறந்த பெண்ணின் கடைசி ஆசை!
நியூயார்க் நகரில் புத்தக வெளியீட்டாளராகப் பணியாற்றிய 38 வயதான கேசி மெக்கின்டைர் 2019-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தனது கர்ப்பப்பை புற்றுநோய்க்கான சிகிச்சையைத் தொடங்கினார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், ``இதை நீங்கள் படிக்கும்போது நான் இறந்திருப்பேன். நான் உங்கள் ஒவ்வொருவரையும் என் முழு மனதுடன் நேசித்தேன், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டு அதோடு RIP Medical Debt-க்கான லாபநோக்கமற்ற நிதி திரட்டும் பிரசார இணைப்பையும் சேர்த்திருக்கிறார்.
மருத்துவ கடன்
குறுகிய காலத்திலேயே அதில் 20,000 அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மதியத்துக்குள் 1,40,000 அமெரிக்க டாலர்கள் சேர்ந்தன. இந்தத் தொகை பிறரின் 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மருத்துவ கடனை அடைப்பதற்கு போதுமானதாக இருந்தது.
இது குறித்து ஆண்ட்ருஸ் கூறுகையில், ``என் மனைவிக்கு நல்ல உடல்நலக் காப்பீடு இருந்தது. கேன்சர் சென்டரில் சிறந்த கவனிப்பையும் பெற்றாள். அப்படியிருந்தும், அவளது கவனிப்புக்கான மருத்துவ இன்ஷூரன்ஸுக்கான காகித வேலைகளில் சில திகிலூட்டும் குற்றச்சாட்டுகளை எங்களால் காண முடிந்தது.
புற்றுநோய்க்கான சிறந்த சிகிச்சையை பணம் செலவழித்து மக்களால் பெற முடியவில்லை என்று நாங்கள் எண்ணினோம். அதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை பற்றி கனவு காண்பதற்குப் பதிலாக, மருத்துவ கடனால் நசுக்கப்படும் மக்களுக்கு உதவ முடியுமா என்று யோசித்தோம்.
கடந்த ஐந்து மாதங்களாக அவள் வீட்டில் இருந்தே சிகிச்சையைப் பெற்று வந்தாள். குடும்பத்துடன் சிறப்பான நேரத்தைச் செலவிட்டாள். கேசி தன் வாழ்க்கையின் முடிவில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள், அவள் முடிக்க விரும்பிய அனைத்தையும் அவளால் முடிக்க முடியவில்லை.
ஆனால், அவளது விருப்பம் மற்றவரின் மருத்துவ கடனை அடைப்பதாக இருந்தது. அவள் விருப்பியதை நினைத்தபடி செய்தேன்’’ என்று கூறியுள்ளார். கேசி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உயிரிழந்தார். ஆனால் தனது கனவை நிறைவேற்றிவிட்டார்.
அனைத்து நாடுகளிலுள்ள பிரச்சினை
தான் அடைந்த துன்பத்தை யாரும் பெறக்கூடாது என்ற மனதுடையவர்கள்தான், பிறரின் வலியையும் புரிந்து கொள்கிறார்கள்.
என்னதான் மெடிக்கல் இன்ஷூரன்ஸ், சேமிப்பு என அவசர தேவைக்காக சேர்த்து வைத்தாலும் அவையெல்லாம் பாதி சிகிச்சை வரைக்கும் கூட தாக்குப் பிடிப்பதில்லை.
அதன் பின்னும் சிகிச்சையைத் தொடர நிறைய மக்கள் கடனுக்கு தள்ளப்படுகிறார்கள். அமெரிக்காவில் 10-ல் ஒருவர் 250 அமெரிக்க டாலர் மருத்துவ கடனோடு இருக்கிறார்.
23 மில்லயன் மக்களில் 11 மில்லியன் பேர் 2,000 அமெரிக்க டாலருக்கு மேல் கடன்பட்டவர் களாக இருக்கிறார்கள் என 2022-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கூறியுள்ளது.இது அமெரிக்கா மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் இதே சிக்கல் தான்.