தலை நோக்கி மேற்கோண்ட துப்பாக்கிச் சூடு; திகில் அனுபவத்தை பகிரும் கனேடியர்
தமது தலையை இலக்கு வைத்து துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துக் கொண்டதாகவும் றொரன்டோவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிர் பிழைத்த நபர் தெரிவிக்கின்றார்.
வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை மற்றும் திருத்தம் செய்யும் கடையொன்றில் தாம் பணியாற்றி வருவதாக மொஹமட் சிராஸ் அப்ஸால் தெரிவிக்கின்றார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமது கடையின் உரிமையாளரான 38 வயதான சாகீல் அஸ்ராப் என்பவர் உயிரிழந்தார். கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது சத்தம் கேட்டு கடையின் முன் பகுதிக்கு ஓடிச் சென்றதாகத் அப்ஸால், தெரிவிக்கின்றார்.
இதன் போது துப்பாக்கிதாரி தமது தலையை இலக்கு வைத்து முதலில் துப்பாக்கிச்சூடு நடாத்தியதாகத் தெரிவித்துள்ளார். தெய்வாதீனமாக தனது தலை மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஆபத்து ஏற்படவில்லை எனவும் பின்னர் உடம்மை இலக்கு வைத்து இரண்டு தடவை சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நேரடியாக தமது உடலில் துப்பாக்கி தோட்ட பாயவில்லை என்ற போதிலும், அருகாமையில் இருந்த நாற்காலியில் பட்டு தெறித்த துப்பாக்கி ரவையினால் கால்களில் காயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி தோட்டாக்கள் முடிந்த காரணத்தினால் கடையை விட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த கடையின் உரிமையாளர் மிகச் சிறந்த மனிதர் எனவும், தம்மை ஓர் சகோதரனைப் போன்று பார்த்துக் கொண்டதாகவும், இந்த இழப்பினை தாங்கிக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடை உரிமையாளரின் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் றொரன்டோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் அன்ட்றூ ஹொங் மற்றும் மில்லடன் எம்.கே. ஒட்டோ பொடி ரிபயார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.