சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆபத்தான பாக்டீரியா கலந்த மருந்து: கனடா மக்களுக்கு எச்சரிக்கை!
சீனாவில் இருந்து கைப்பற்றப்பட்ட அங்கீகரிக்கப்படாத ‘பெப்டைட்’ மருந்துகளில் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை உட்கொள்ளவோ அல்லது ஊசி மூலம் செலுத்தவோ வேண்டாம் என கனடா மக்களுக்கு கனடிய சுகாதாரத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ‘ஷாங்காய் ERP பெப்டைட் பயோடெக்னாலஜி’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 11,400-க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைக் கைப்பற்றி பரிசோதித்ததில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
"தூய்மையற்ற அல்லது பாக்டீரியா கலந்த மருந்துகளை ஊசி மூலம் செலுத்துவது கடுமையான தொற்றுகள், மருத்துவமனை அனுமதி மற்றும் தீவிர நிகழ்வுகளில் உயிருக்கே ஆபத்தான செப்சிஸ் நோய்க்கு வழிவகுக்கும்" என்று கனடிய சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத ஊசி மருந்துகளைப் பயன்படுத்திய பின், ஊசி போட்ட இடத்தில் சிவத்தல், வீக்கம், வலி, காய்ச்சல் அல்லது குளிர் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அமினோ அமிலங்களின் குறுகிய சங்கிலிகளால் தயாரிக்கப்படும் பெப்டைடுகள் பொதுவாக நீரிழிவு, உடல் பருமன் மற்றும் எலும்புப்புரை போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
கனடாவில் ஓசெம்பிக், வேகோவி மற்றும் செப்பாக்ண்ட் போன்ற அங்கீகரிக்கப்பட்ட பெப்டைட் மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
எனினும், சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகர்களின் விளம்பரங்களால் அங்கீகரிக்கப்படாத பெப்டைட் மருந்துகளின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.