கனடாவில் இந்த விளையாட்டுப் பொருள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட ரக மரத்தாலான குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூண்டு கேட்டை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பெற்றோர்களுக்கு கனடிய சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதில் உள்ள திருகுகள் தளர்ந்து கழன்று விழுவதால், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HARPPA Wooden Baby Playpen Gate 24 அங்குல உயரம் கொண்ட, சுருக்கி விரிக்கக்கூடிய தடுப்பு வேலியே இவ்வாறு திரும்பப்பெறப்படுகின்றது.

HARPPA மர கேட்டில் உள்ள திருகுகள் தளர்வடைந்து, கேட்டிலிருந்து தனியாகக் கழன்று விழக்கூடும். இதனைப் பிள்ளைகள் விழுங்கினால் மூச்சுத்திணறல் ஏற்படலாம் அல்லது அவர்களுக்குக் காயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் அக்டோபர் 2024 முதல் மே 2025 வரையிலான காலப்பகுதியில், இந்த பாதிப்புக்குள்ளான தயாரிப்பின் சுமார் 473 அலகுகள் (Units) விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மே 10, 2026 வரையில், இந்த திருகுகள் கழன்றது தொடர்பாக நிறுவனத்திற்கு 4 புகார்கள் வந்துள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக இதுவரை யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தயாரிப்பை வாங்கிய நுகர்வோர் அதனை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மாற்று கேட்டை பெற்றுக்கொள்வதற்காக HARPPA நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.