அமெரிக்க சுகாதார தகவல்களில் தங்கியிருக்க முடியாது– கனடா சுகாதார அமைச்சர்
அமெரிக்காவை சுகாதாரம் மற்றும் அறிவியல் தகவல்களுக்கான நம்பகமான ஆதாரமாக கனடா நீண்ட காலமாக பார்த்து வந்த நிலையில், இனி அந்த நிலை இல்லை என கனடா மத்திய சுகாதார அமைச்சர் மார்ஜரி மிஷேல் தெரிவித்துள்ளார்.
நம்பகமான கூட்டாளியாக அமெரிக்காவை இனியும் முழுமையாக நம்ப முடியாது” எனக் கூறியுள்ளார். சில விடயங்களில் அமெரிக்கா நம்பகமாக இருக்கலாம் என்றாலும், தடுப்பூசிகள் தொடர்பில் கனடா தனித்த பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஒரு ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், சுகாதார நிறுவனங்களில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

சுகாதார சேவைகள்
அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ரொபர்ட் எப். கெனடி ஜூனியர், தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துக்களுக்காக அறியப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது காலத்தில், அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) இணையதளம், தடுப்பூசிகள் ஆட்டிசத்தை ஏற்படுத்தாது என்ற நிலைபெற்ற அறிவியல் உண்மைக்கு முரணான தகவல்களை வெளியிட்டது.
இதன் காரணமாக, தடுப்பூசி பாதுகாப்பு குறித்த CDC வெளியிடும் தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என முன்னாள் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கெனடி தேர்ந்தெடுத்த ஆலோசனைக் குழு, புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியை நிறுத்த பரிந்துரைத்துள்ளதுடன், குழந்தைகளுக்கான முழு தடுப்பூசி அட்டவணையிலும் மாற்றங்களை பரிசீலித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவில் பரவும் தவறான தகவல்கள் கனடாவுக்கு “பெரும் கவலையாக” இருப்பதாக அமைச்சர் மிஷேல் கூறியுள்ளார்.
அதனால், ஒரே கருத்துடைய பிற நாடுகளுடன் கனடா இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.