கனடா முழுவதும் வியாபிக்கும் வெப்ப அலை
கனடா முழுவதும் வெப்ப அலை வியாபித்து வருவதாக நிபுணர்கள் கூறி வரும் நிலையில், இரவு நேரங்களில் வெப்பம் அதிகரிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்ப அலை காரணமாக ஜூன் மற்றும் ஜூலை முதல் வாரம் வரையில் 800 பேர்கள் வரை இறந்துள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மரண எண்ணிக்கை வெறும் 232 என பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மாகாண அரசால் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கனடாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தொடர்ந்து நீடித்து வருகிறது. பல பகுதிகளில் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
ஒன்ராறியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இரவு நேரங்களிலும் வெப்பம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நமது உடல் குளிர்ச்சியடைய வாய்ப்பில்லாமல் போவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மட்டுமின்றி இதய நோயாளிகள் அல்லது ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புள்ளவர்களுக்கு இந்த இரவு நேர வெப்பம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
2018ல் Montreal பகுதியில் வெப்ப அலை ஏற்பட்ட போது சராசரி வெப்ப நிலை பகல் நேரங்களில் 34C என்றே இருந்துள்ளது, அதே வேளை இரவில் 20C க்கு கீழே சரிவடையவில்லை.
வெப்ப அலையால் Montreal பகுதியில் 66 பேர்கள் மரணமடைந்தனர்.
கனடாவை பொறுத்தமட்டில் சராசரி வெப்ப நிலையில் இருந்து 1.7C அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது கனடா பூமியைவிட இரு மடங்கு விகிதத்தில் வெப்பமடைகிறது என நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது.