பங்களாதேஷில் சீரற்ற காலநிலையினால் 51 பேர் உயிரிழப்பு
பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் டாக்கா உட்பட நாட்டின் பெரும்பகுதியைத் தாக்கிய திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.
இதுவரை பதிவாகியுள்ள மரணங்களில் பாதியற்கும் மேற்பட்டவை, பெருமளவிலான ரோஹிங்கியா அகதிகள் வாழும் காக்ஸ் பஜார் மாவட்டத்திலேயே நிகழ்ந்துள்ளன.

கடந்த வாரம் இந்த மாவட்டத்தில் வெள்ள நீர் பாடசாலைக்குள் புகுந்ததில் பல மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்தனர்.
பங்களாதேஷ் பல நதிகளைக் கொண்ட ஒரு தாழ்நில நாடாகும். இங்கு வருடாந்த பருவமழைக்காலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமானது என்றாலும், காலநிலை மாற்றம் காரணமாக மழைப்பொழிவு வழக்கத்தை விட அதிக தீவிரமாகவும், அடிக்கடி நிகழக்கூடியதாகவும் மாறியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்த இந்த கனமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
அத்துடன் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களை வெளியேற்றியுள்ளதுடன், மாணவர்களின் பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத்தின் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதிவாகியுள்ள 51 மரணங்களில் 28 மரணங்கள் காக்ஸ் பஜார் பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன. இந்த மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய அகதிகள் குடியேற்றப் பகுதியாகக் கருதப்படும் 10 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.