வியட்நாமில் கனமழை ; பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு
ஆசிய நாடான வியட்நாமில் கடந்த வாரம் தொடக்கம் பெய்து வரும் கனமழை பல்வேறு மாகாணங்களில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்ளிட்ட 5 மாகாணங்களில் இடையறாத கனமழை காரணமாக பெருமளவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கின.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், 12 பேர் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் தொடர்ந்து வானிலை மாற்றங்கள் குறித்து எச்சரிக்கையும் வெளியிட்டு வருகின்றனர்.