அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி; இந்திய பெண்ணை அவமானப்படுத்திய சீனா!
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய பெண் பிரேமா வாங்சோம் தாங்டோக், ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் வைத்து சீன குடிவரவு அதிகாரிகளால் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்கு சென்ற அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய பெண் பிரேமா வாங்சோம் தாங்டோக் , ஷாங்காயில் இடைநிறுத்தம் செய்தபோது, அவரது இந்திய பாஸ்போர்ட்டை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர்.

இந்தியாவின் இறையாண்மைக்கு நேரடி அவமானம்
அதோடு அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி, எனவே உங்கள் பாஸ்போர்ட் செல்லாது என்று அதிகாரிகள் கூறியதாக பிரேமா தெரிவித்துள்ளார். மூன்று மணி நேரமாக இருக்க வேண்டிய அவரது இடைநிறுத்தம், உணவு, தகவல் மற்றும் அடுத்த விமான அனுமதி மறுக்கப்பட்டு, 18 மணி நேர துயரமாக நீடித்தது.
அதிகாரிகள் அவரை கேலி செய்ததுடன், சைனா ஈஸ்டர்ன் விமானத்தில் மட்டுமே புதிய டிக்கெட் வாங்கும்படி அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இறுதியில், இங்கிலாந்தில் உள்ள நண்பர் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இந்திய அதிகாரிகளின் உதவியுடன் அவர் புறப்பட்டார்.
இந்த சம்பவத்தை இந்தியாவின் இறையாண்மைக்கு நேரடி அவமானம் என்று கூறி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள பிரேமா, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.