கார் பயணத்திலும் ஹிஜாப் அவசியம்; ஈரானிய பொலிஸார் அதிரடி அறிவிப்பு!
ஈரானில் கார்களில் பயணம் செய்யும் பெண்களும் ஹிஜாப் அணிவது அவசியம் என பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் 22 வயது பொலிஸ் காவலில் இருந்தபோது செப்டெம்பர் 16 ஆம் திகதி உயிரிழந்தமைக்கு எதிராக ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கார்களில் பயணிக்கும்போது ஹிஜாப்பை அகற்றுவது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் புதிய கட்டடம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படுவதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என ஈரானின் ஃபார்ஸ் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், கார்களில் செல்பவர்கள் ஆடை ஒழுங்குவிதிகளை பின்பற்றாதமை குறித்து கார் உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பபட்டன.
மீண்டும் ஒழுங்குவிதி மீறப்பட்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், தற்போது பொலிஸாரால் அனுப்பப்படும் குறுந்தகவல்களில், சட்ட நடவடிக்கை குறித்த தகவல்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரால் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட குறுந்தகவல்களில் 'உங்கள் வாகனத்தில் ஹிஜாப் நீக்கப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டது.
மேலும் சமூக வழக்கங்களுக்கு மதிப்பளிப்பது அவசியம். மீண்டும் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தவும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.