எயிட்ஸ் பரவல் புதிய உச்சம் ; மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
இலங்கையில் எச்.ஐ.வி / எயிட்ஸ் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி 2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மாத்திரம் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் (NSACP) கவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுமார் 639 எச்.ஐ.வி / எயிட்ஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 6% அதிகரிப்பாகும்.

இக்காலப்பகுதியில் எச்.ஐ.வி / எயிட்ஸ் தொடர்பான பாதிப்புகளால் சுமார் 30 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தொற்றுக்குள்ளானவர்களின் தரவுகளை ஆய்வு செய்யும்போது சில முக்கிய உண்மைகள் வெளிப்படுகின்றன.
இதன்படி தொற்று பாதிப்பில் ஆண்களே முன்னிலையில் உள்ளதாகவும், ஆண்-பெண் விகிதாசாரம் 6:1 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான புரிதல்கள், பாதுகாப்பற்ற நடத்தைகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவை இந்த அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் இதன் பாதிப்பைக் குறைக்க முடியும் என சுகாதாரப் பிரிவு வலியுறுத்துகிறது.