கனடாவில் வீட்டுக்கான எரிசக்தி கட்டணம் 100 வீதம் அதிகரிக்கும்: காரணம் கூறும் நிபுணர்கள்
கனடாவில் இந்த குளிர்காலத்தில், வீட்டுக்கான எரிசக்தி கட்டணம் 50 முதல் 100 வீதம் அதிகரிக்க அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு 300 வீதம் வரையில் கட்டணம் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இதனால், கனேடியர்களும் அதிக மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு கட்டணங்களை செலுத்தும் உலகளாவிய சமூகத்துடன் இணைகின்றனர் என்றே நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், கனடாவின் சில மாகாணங்களில் மட்டும் மக்கள் சராசரியான கட்டணங்களை செலுத்தும் வாய்ப்பிருப்பதாகவும், பொதுவாக அதுவும் அதிக கட்டணமாகவே இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பெரும்பாலான கனேடியர்கள், அதாவது 61% மக்கள் எரிவாயு தொடர்புடைய உபகரணங்களையே பயன்படுத்துகின்றனர். 29% பேர்கள் மட்டுமே வீடுகளில் குளிர்போக்க மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சமீப நாட்களாக ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக எரிவாயு கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் உலக நாடுகளுக்கான இயற்கை எரிவாயு வழங்கலானது ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இதனால் கட்டணங்களும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தேவையில் எந்த மாற்றமும் இல்லாமல், உற்பத்தி குறைவாக இருப்பதால் விலை பல மடங்கு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தரப்பு விளக்கமளித்துள்ளது.