அமெரிக்க அரசமுடக்க நிலையினால் கனடிய விமானப் பயணிகள் பாதிப்பு
அமெரிக்க அரச முடக்க நிலை காரணமாக கனடிய விமானப் பயணிகள் பாதிப்புக்களை சந்திக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாண்ட்ரியல்–பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்படும் பலகையில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் காட்டும் சிவப்பு கோடுகள் மட்டுமே தோன்றின.
கனேடிய விமான நிறுவனங்களும் சில தாமதங்களை அறிவித்திருந்தாலும், பெரும்பாலும் குறைந்த அளவிலேயே இடையூறுகள் ஏற்பட்டன.

பயணத்திட்டங்களில் தாக்கம்
இருப்பினும், அமெரிக்க எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைகள் அவர்களது பயணத்திட்டங்களில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற அச்சத்தில் பல பயணிகள் இருந்தனர்.
அமெரிக்க அரசு முடக்கம் காரணமாக வெள்ளிக்கிழமை 1,000க்கும் மேற்பட்ட விமானங்களும், சனிக்கிழமை மேலும் 1,000க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சம்பளம் இன்றி பணியாற்றி வரும் நிலையில், அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
விமானிகள் கட்டுப்பாட்டாளர்களின் மன அழுத்தம் மற்றும் தொடர்பின்மை குறித்து அதிக அளவில் புகார்கள் அளித்து வருகின்றனர்,” என அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சான் டஃபி தெரிவித்துள்ளார்.
FAA-வின் உத்தரவு சர்வதேச அல்லது கனடா-அமெரிக்க எல்லை விமானங்களை நேரடியாக இலக்கு வைக்கவில்லை என்றாலும், சில தாக்கங்கள் ஏற்படலாம் என நிபுணர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. தற்போது மொத்த விமானங்களில் சுமார் 4% மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் அது 10% வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எதிர்வரும் நன்றியறிதல் தினம் (Thanksgiving) காலத்தில் இத்தகைய இடையூறுகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும், தெற்குத் திசை நோக்கி பயணிக்கும் கனேடியர்களுக்கும் இதன் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.