கனடாவில் வீட்டுக் கடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கனடாவில் வீட்டுக் கடன் பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு நெருக்கடி நிலைமை உருவாகும் சாத்தியம் காணபப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில், கனடாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உரிமையாளர்கள் தங்களின் வீட்டு கடன்களை (Mortgage) புதுப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர், கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பகாலத்தில், வரலாறு காணாத குறைந்த வட்டி விகிதங்களில் வீடுகளை கொள்வனவு செய்தவர்களாவர்.

2021 ஆம் ஆண்டில் வீடு கொள்வனவு செய்தவர்களுக்கு, அந்த “நல்ல காலம்” இப்போது முடிவுக்கு வரக்கூடும் என வீட்டுமனை தரகு முகவர்கள் எச்சரிக்கின்றனர். அப்போது வீட்டு கடன்களுக்கு 1.5 முதல் 3 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதங்கள் இருந்தன.
ஆனால் தற்போது, கடன் புதுப்பிக்கும் போது 4 முதல் 4.09 சதவீதம் வரை வட்டி விகிதங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக பலருக்கு மாதாந்திர தவணை தொகை சுமார் 20 சதவீதம் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சராசரியாக 5.5 இலட்சம் டாலர் மதிப்புள்ள ஒரு வீட்டு கடனுக்கு, மாதத்திற்கு கூடுதலாக சுமார் 550 டாலர் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது
. “இதன் பொருள், ஆண்டுக்கு சுமார் 6,500 முதல் 6,600 டாலர் வரை கூடுதல் செலவு ஏற்படும். குடும்பங்களின் வாழ்க்கைச் செலவில் இது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தும்,” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.