கனடாவில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
கனடாவில் எரிந்த நிலையில் வாகனமொன்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சர்ரியைச் சேர்ந்த 22 வயது ஹம்ஸா பாசில் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம், அண்மைய நாட்களாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்று வரும் கோஷ்டி மோதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவரை ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு (IHIT) பகிரங்கமாக அடையாளம் காட்டியுள்ளது.
கடந்த ஜூலை 27 இரவு 11:30 மணியளவில், பிரேசர் பள்ளத்தாக்கில் உள்ள பொப்கம் பகுதியில் எரிந்த வாகனத்திற்குள் இறந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது.
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, பாசில் முன்னர் காவல்துறையுடன் தொடர்பு கொண்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர், கொலைக்கு முன்பு அவர் காணாமல் போனதாக தெரிவித்திருந்தனர்.
உயிரிழந்தவர் பற்றியோ அல்லது அவரது மரணத்திற்கு முந்தைய நாட்களில் அவரது செயல்பாடுகளைப் பற்றியோ தகவல் உள்ளவர்கள் விசாரணையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.