பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்ட தகவல்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
காசாவில் கடந்த 48 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறான ஒரு நிலையில் பிணை கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிணை கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வர இஸ்ரேல் அரசு உறுதிபூண்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்கான முதல் கட்ட நடவடிக்கைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 4 நாட்களுக்கு காசாவில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்தி வைக்கும்.
இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக கத்தார் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"4 நாள் போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பெண்கள், சிறுவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விடுவிக்கப்படுவர். மேலும் காசாவுக்குள் கூடுதல் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும்" என கூறியுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் ஒரு போர்நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட போதிலும், காசா சண்டையில் எந்த இடைநிறுத்தமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஒப்பந்தம் புதன்கிழமை தொடக்கத்தில் இஸ்ரேலிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இன்று நடைமுறைக்கு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.