சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் ; 3 பேர் பலி
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானக் கேப்டன் ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாகக் கூறப்படுகிறது. ஏமனில் அரசுப் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது.

இந்த மோதலில் ஏமன் அரசுப் படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவளித்து வருகின்றன.
இதனால், சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான பதற்றம் நீடித்து வருகிறது.
ஏமனில் அண்மைக் காலமாக மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக சவுதி தலைமையிலான கூட்டுப்படையினரும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இந்நிலையில், குறித்த தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் விமானக் கேப்டன் ஒருவரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.