உடலில் பச்சை குத்துவோரின் கவனத்திற்கு….
மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்களது உடலில் பச்சை அல்லது டாட்டூ பதித்துவருகின்றனர்.
கடந்த சில தசாப்தங்களில் உலகளாவிய ரீதியில் பச்சை குத்துவது அதிகரித்துவரும் நிலையில், இதனால் மனித உடல்நலத்திற்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரமற்ற அல்லது முறையாக சுத்தம் செய்யப்படாத ஊசிகள் மூலம் பச்சை குத்துவதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பது ஏற்கனவே அறியப்பட்ட விடயமாகும்.

எனினும், அண்மைய ஆண்டுகளில் கடுமையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், இவ்வகை ஆபத்துகள் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பச்சை மை மனித உடலுக்குள் செலுத்தப்பட்ட பிறகு நீண்டகாலத்தில் அது உடலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது, குறிப்பாக நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து இன்னும் முழுமையான புரிதல் இல்லை.
ஆய்வுகளின் படி, பச்சை மையில் உள்ள சில வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு செல்களால் அடையாளம் காணப்பட்டு, நிணநீர் முனைகளுக்கு (lymph nodes) கொண்டு செல்லப்படுகின்றன.
அவை காலப்போக்கில் அங்கு சேர்ந்து குவியக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் இடத்தில் டாட்டூ மை இருப்பது, தடுப்பூசிகளுக்கான நோய் எதிர்ப்பு எதிர்வினைகளை மாற்றக்கூடும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.