நாடொன்றில் அரங்கேறிய பகீர் சம்பவம்; கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்ட மனித தலைகள்
ஈக்வடோர் நாட்டில் உள்ள கடற்கரையொன்றில் 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு, அவர்களின் தலைகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (11) ஈக்வடோரின் மனாபி (Manabi) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லோபஸின் (Puerto Lopez) சிறு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சுற்றுலா கடற்கரையிலேயே இந்தத் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல்
கடந்த சில ஆண்டுகளாக ஈக்வடோர் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகரித்ததுடன் கொடூரமான கொலைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சூழ்நிலையிலேயே குறித்த கடற்கரைப் பகுதியில் 5 மனிதத் தலைகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.
அதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்க, பொலிஸ் சம்பவ இடத்துக்குச் சென்று கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த மனிதத் தலைகள் காணப்படும் இடத்தில் இரத்த அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு போதைப்பொருள் கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்தக் கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.