உக்ரைன் போரில் மனிதாபிமானப் பணி ; மெலனியா டிரம்ப் உயரிய விருது
ரஷ்யா – உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குடும்பங்களைப் பிரிந்த உக்ரைனியக் குழந்தைகளுக்கும் உதவுவதில் ஆற்றிய மனிதாபிமானப் பங்களிப்பைப் பாராட்டி, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்புக்கு உக்ரைன் அரசு தனது உயரிய அரச விருதுகளில் ஒன்றை வழங்கிக் கௌரவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, மெலனியா ட்ரம்புக்கு 'Order of Princess Olga, First Class' என்ற விருதை வழங்குவதற்கான ஆணையை நவம்பர் 2ஆம் திகதி பிறப்பித்தார். குறித்த அறிவிப்பு நவம்பர் 4ஆம் திகதி வெளியிடப்பட்டது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்த்துச் செல்லப்பட்ட உக்ரைனியக் குழந்தைகளை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் முயற்சிகளிலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் மெலனியா ட்ரம்ப் பங்களித்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலேஷ்கி (Oleshky) பகுதியில் பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த முயற்சியில் அவர் முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி ஆரம்பமான ஆறு நாள் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் ஊடாக, உணவு, மருந்து மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்டிருந்த பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 800 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, போரினால் பிரிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் பணிகளிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்த மனிதாபிமான நடவடிக்கைகளைப் பாராட்டியே மெலனியா ட்ரம்புக்கு உக்ரைனின் 'Order of Princess Olga, First Class' விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒலேஷ்கி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ரஷ்ய மற்றும் உக்ரைனியப் பிரதிநிதிகளை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்தவும் மெலனியா ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் மீளிணைப்பை முன்னிறுத்திய இந்த முயற்சிகள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.