இப்ராஹிம் ரைசி இறுதிப்பயணம்; அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உள்ளிட்ட 9 பேரின் இறுதி சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் நேற்று (22) இடம்பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த ஒன்பது பேரினதும் பூதவுடல்கள் டெஹ்ரானின் டவுன்டவுன் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆசாதி சதுக்கத்தை சென்றடைந்தது.
வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி
இப்ராஹிம் ரைசியின்(Ebrahim Raisi) இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக வெளிநாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த ஒன்பது தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
ஈரான்-அஜர்பைஜான் இடையே ஓடும் அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து பிரமாண்ட அணை கட்டியுள்ளன. இதை திறந்து வைப்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கடந்த 19-ந் திகதி அஜர்பைஜான் சென்றார்.
இதன்போது அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர்.அணை திறப்பு விழாவை முடித்துக் கொண்டு அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi)உள்ளிட்டோர் 3 ராணுவ ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டனர்.
2 ஹெலிகாப்டர்கள் ஈரானின் டேப்ரிஸ் நகரில் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், அதிபர் ரைசி, வெளியுறவு மந்திரி உசைன் உள்ளிட்டோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மட்டும் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்து மாயமானது.
அதை தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மாயமான ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் அதிபர் ரைசி(Ebrahim Raisi) உள்பட 9 பேர் உயிரிழந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.