Ilford இந்திய உணவக தீ விபத்து; சிறுவன் உட்பட இருவர் கைது
லண்டனில் Ilford நகரில், இந்திய உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீ விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில், அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் மற்றும் 54 வயது மதிக்கத்தக்க முதியவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சி.சி.டி.வி காட்சிகள்
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில், இல்ஃபோர்ட் பகுதியில் உள்ள ‘இந்தியன் அரோமா’ என்ற உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக அவசர சேவைப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், ஐந்து பேரை மீட்டனர்.
காயமடைந்தவர்களில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்குவர். இதில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பெருநகர காவல் துறை (Metropolitan Police) தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதற்கு முன்பே காயமடைந்த இரண்டு பேர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், அவர்களைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஒரு தற்செயலான விபத்து அல்ல, மாறாக திட்டமிட்ட சதி என்று சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்த காட்சிகளில், முகமூடி அணிந்த ஒரு குழு உணவகத்திற்குள் நுழைந்து, தரையில் ஒரு திரவத்தை ஊற்றிவிட்டுச் செல்வது பதிவாகியுள்ளது.
அடுத்த சில நொடிகளில், உணவகம் முழுவதும் தீப்பிழம்புகளாக மாறியுள்ளன. இந்தக் காட்சிகளில், ஒருவர் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில், உணவகத்தில் இருந்து வெளியே ஓடி வருவதும் பதிவாகியுள்ளது.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் தீ வைத்ததாக சந்தேகித்து, ஒரு 15 வயது சிறுவன் மற்றும் ஒரு 54 வயது நபர் இருவரையும் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துறையை அணுகலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.