சட்டவிரோத குடியேறிகள்; ட்ரம்ப்பை கண்டித்த போப் ஆண்டவர்!
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை அதிபர் ட்ரம்ப் நாடு கடத்தி வரும் செயல்பாடு குறித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையோடு அமெரிக்காவின் சட்டங்களில் பல மாற்றங்களை உருவாக்கி வருகிறார்.
அமெரிக்க கத்தோலிக்க பாதிரியார்களுக்கு போப் கடிதம்
அந்த வகையில் குடியரசு தலைவராக பொறுப்பேற்றதுமே, அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றி வருகிறார்.
இந்தியா, கனடா, மெக்ஸிகோ என பல நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்க ராணுவம் விமானம் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகளை கத்தோலிக்க திருச்சபை தலைவரான போல் பிரான்சிஸ் கண்டித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களுக்கு போப் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்த மக்களின் கண்ணியத்தை பாதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போர், வறுமை மற்றும் காலநிலை பேரழிவுகளில் சிக்கி தப்பி வந்த மக்களை மற்ற நாடுகளை அரவணைத்து பாதுகாக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாடும் தங்கள் திறன் வரம்பிற்கு ஏற்ற அளவிலாவது இதனை செய்ய வேண்டும் என்றும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.