பாதிக்கப்பட்ட 2 மாவட்டங்கள்... மொத்தமாக ஊரடங்கு அறிவித்த நாடு
உகாண்டாவில் வேகமெடுக்கும் எபோலா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதனால் இரவில் ஊரடங்கு அமுலில் இருக்கும், தேவாலயங்கள் மூடப்பட்டிருக்கும், தற்போது எபோலா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இரு மாவட்டங்களில் 21 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.
மேலும் குறித்த மாவட்டங்களில் இருந்து வெளியேறும் மக்கள் மற்றும் உள் நுழையும் மக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய உகாண்டாவில் அமைந்துள்ள Mubende மற்றும் Kassanda மாவட்டங்களில் எபோலா பரவலைத் தடுக்கவே குறித்த ஊரடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தற்காலிக நடவடிக்கை மட்டுமே எனவும், வேகமெடுக்கும் தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், புதிதாக எபோலா பரவல் கண்டறியப்பட்ட செப்டம்பர் 20ம் திகதி முதல் இதுவரை 19 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி யோவேரி முசெவேனி தெரிவித்துள்ளார்.