இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா
‘டிட்வா’ புயல் காரணமாக இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்ப அமெரிக்க டொலர் 450 மில்லியன் நிதி உதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், இந்த உதவித் திட்டத்தின் கீழ் 350 மில்லியன் டொலர் சலுகை கடன் வசதிகளாகவும் அமெரிக்க டொலர் 100 மில்லியன் நேரடி மானியமாகவும் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இன்று காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், டிட்வா காரணமாக இலங்கையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாக கூறினார்.

“பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதம், அவசர நிலைகளில் முதல் பதிலளிப்பாளராக இந்தியா செயல்படும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
அதன்படி, இலங்கைக்காக 450 மில்லியன் டொலர் மறுசீரமைப்பு உதவித் தொகுப்பு வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உறுதியை எவ்வாறு விரைவாக நடைமுறைப்படுத்தலாம் என்பதே எங்கள் கலந்துரையாடலின் மையமாக இருந்தது,” என அவர் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் மிக நெருங்கிய அண்டை நாடாகிய இந்தியா, பொருளாதார நெருக்கடி நேரத்தில் உதவியதுபோல், இப்போதைய நெருக்கடியிலும் முன்னின்று உதவுவது இயல்பானதென ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனான இணைந்த ஊடக சந்திப்பின் போது அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.