இந்தியாவில் கொரோனா பரவியதற்கான காரணத்தை வெளியிட்டது உலக சுகாதார மையம்

Praveen
Report this article
இந்தியாவில் கொரோனா பரவியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது உலக சுகாதார மையம்.
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பி.1.617 உருமாற்ற கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த வகை வைரஸ் மீண்டும் பரவி வருவதும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பி.1.1.7 உள்ளிட்ட இதர கொரோனா வைரஸ் வகைகளும் இந்தியாவில் பரவி வருகின்றன.
உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதம் பேர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதே போல பி.1.167.2 என்ற வைரசும் பரவி வருகிறது. இந்த வைரசால் 7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீதம் பதிவாகி உள்ளது. சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.