இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்றுடன் 6 பேர் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய வகை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்கள் ஆறு பேரும் பிரித்தானியாவில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவருக்கு பெங்களூரில் உள்ள ஆய்வகத்திலும், இருவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்திலும், ஒருவருக்கு புனேவிலும் உள்ள ஆய்வகத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முந்தைய கொரோனா வைரஸ் திரிபைவிட, 70 சதவீதம் வேகமாக பரவக்கூடிய புதிய திரிபுநிலைக்குள்ளான கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், அது தடுப்பூசி ஆராய்ச்சியில் பெரிய பாதிப்பை உண்டாக்காது. வேகமாகப் பரவும் தன்மைதான் இந்த புதிய வகை வைரஸ் உண்டாக்கும் கவலை. ஆனால், வழக்கமான சமூக விலகல் மூலம் இதைத் தவிர்க்கலாம்; தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகள் மூலமே இதை எதிர்கொள்ளலாம்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி மூலமே இந்த புதிய திரிபுக்கும் எதிரான நோய் எதிர்ப்புத் திறனைப் பெற முடியும் என்று மருத்துவ அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடா,ஸ்பெய்ன்,சுவீடன்,பெல்ஜியம்,பிரான்ஸ்,டென்மார்க்,ஜேர்மனி,இத்தாலி,நெதர்லாந்து,தென்னாபிரிக்கா,அவுஸ்திரேலியா,ஜப்பான் மற்றும் சிங்கபூர் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.