மீண்டும் ஆரம்பமாகவுள்ள இந்திய, சீன விமான சேவை
இந்தியாவும், சீனாவும் இந்த மாதத்தில் நேரடி விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் படிப்படியாக இயல்பாக்கப்படுவதற்கான மற்றொரு படியாகும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2022 ஆண்டு, இமயமலை எல்லையில் இரண்டு நாட்டு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
எனினும், கடந்த ஒரு வருடமாக டெல்லியும் பீய்ஜிங்கும் எல்லையில் பதற்றங்களைத் தணிக்க நடவடிக்கை எடுப்பது உட்பட உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையிலேயே, இந்தியாவின் விமான நிறுவனமான இண்டிகோ, கொல்கத்தா மற்றும் குவாங்சோ நகரங்களுக்கு இடையே நேரடி விமானங்களை ஒக்டோபர் 26 முதல் மீண்டும் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவும், சீனாவும் சுமார் 2100 மைல்கள் நீளமுள்ள ஒரு வரையறுக்கப்படாத எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. அத்துடன், இரண்டு நாடுகளும் சில பிரதேசங்களுக்கு உரிமைகளையும் கோருகின்றன.