கிராம் எடையால் ஒலிம்பிக்கில் இருந்து இந்திய வீராங்கனை நீக்கம்!
ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்திய வீராங்கல்னை வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது.
இறுதிப்போட்டி இன்று
இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகி விட்டது.
இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.