அமெரிக்காவில் காதலியை கொலை செய்து தப்பி ஓடிய இந்தியர்; ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவியான தனது காதலியைப் படுகொலை செய்துவிட்டு, தாயகமான இந்தியாவிற்குத் தப்பியோட முயன்ற 20 வயது இந்திய இளைஞர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் விமான நிலையத்தில் வைத்து சர்வதேசக் காவல் துறை மற்றும் FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வாலிபர் வருண் பேட்சிஹாரி (என அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டியூக்சன் (Tucson) நகரில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் வணிகப் பகுப்பாய்வு (Business Analytics) படித்து வந்த வருண் பேட்சிஹாரியும், 19 வயதான ஜூலிசா ரூபி சலசார் (Julissa Rubi Salazar) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்
வருணின் வன்முறைப் போக்கால் அதிருப்தியடைந்த ஜூலிசா, அவருடனான உறவை முறித்துக் கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஜூலிசாவை வருண் கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு தப்பிப்பதற்காக, ஜூலிசாவின் செல்போன் மற்றும் வங்கிக் கார்டுகளைத் திருடிய வருண், கொலையை மறைக்க ஜூலிசாவின் தாயாருக்குத் தவறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து ஜூலிசாவின் பணத்தைப் பயன்படுத்தி டியூக்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹூஸ்டன் வழியாக ஜெர்மனிக்கு விமானத்தில் ஏறியுள்ளார். ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்குப் பறக்க அவர் திட்டமிட்டிருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜூலிசாவின் உடலைக் கைப்பற்றிய டியூக்சன் காவல் துறையினர், வருண் மீது முதல் நிலைக்கொலை (First-degree murder) மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து சர்வதேச அளவில் தேடுதல் எச்சரிக்கை விடுத்தனர்.
FBI அமைப்பும் ஜெர்மன் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதால், ஜெர்மனியில் விமானம் தரையிறங்கிய உடனேயே வருண் மடக்கிப் பிடிக்கப்பட்டார். தற்போது ஜெர்மனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை விரைவில் அமெரிக்காவிற்கு நாடுகடத்தி வழக்கு விசாரணை நடத்த அரிசோனா காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.