கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி பெண் கொலை ; 7 மாதங்களுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்த முக்கிய திருப்பம்
கனடாவின் டொராண்டோ நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கடந்த ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரது காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொராண்டோவில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா (30) கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ஹிமான்ஷி குரானாவின் காதலனான டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
எனினும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் அப்துல் கபூரி தலைமறைவானார்.
அவரைக் கண்டுபிடிப்பதற்காக டொராண்டோ காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு, அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர், அப்துல் கபூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கனடாவுக்கு வெளியே வேறு ஒரு நாட்டுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், அந்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் கனடாவுக்கு அழைத்துவரப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அப்துல் கபூரி எந்த நாட்டில் பதுங்கியிருந்தார் என்பது தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிடவில்லை.

டொராண்டோ காவல்துறையின் தலைமறைவுக் குற்றவாளிகளைத் தேடும் பிரிவு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அவரைக் கண்டறிந்து கைது செய்து கனடாவுக்கு அழைத்துவருவதற்காக தேசிய மற்றும் சர்வதேச காவல் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியதாக டொராண்டோ காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அப்துல் கபூரி மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, ஹிமான்ஷி குரானாவின் மரணம் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.