ட்ரம்ப்பின் 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல் ; நெதன்யாகு அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 'அமைதி சபை' (Board of Peace) தயாரித்த காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஹமாஸ் இயக்கம் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைத்து, கலைக்கப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து பின்வாங்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, "அமைதி சபையின் 15 அம்ச ஆவணத்தை இஸ்ரேல் மறுக்கிறது. ஹமாஸ் உண்மையிலேயே ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை ராணுவம் எவ்விதப் பின்வாங்குதலையும் மேற்கொள்ளாது" என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போலியான கலைப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது என்றும், ஹமாஸ் அமைப்பு உண்மையான முறையில் முழுமையாகக் கலைக்கப்படுவதையே இஸ்ரேல் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, "அமெரிக்காவிடம் சில யோசனைகள் உள்ளன. அவற்றில் சில எங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், சில ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.