கனடாவில் தாய் மற்றும் மகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தை ஏற்படுத்திய நபர்: ஒன்பது மாதங்களுக்குப் பின் கைது
கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் ஒரு தாயும் மகளும் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தொன்றை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பின் கனடாவில் கால்வைத்த அவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் திகதி, மனித்தோபா மாகாணத்திலுள்ள Altona என்னுமிடத்தில் சிக்னலில் நிற்காமல் சென்ற ட்ரக் ஒன்று கார் ஒன்றின் மீது மோதியது.
அந்த விபத்தில், காரில் பயணித்த சாரா (Sara Unger, 35) என்னும் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணித்த அவரது மகளான அலெக்சா (Alexa, 8) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவளும் உயிரிழந்தாள்.
விபத்தை ஏற்படுத்திய ட்ரக்கை இயக்கிய நவ்ஜீத் சிங் (Navjeet Singh, 25) என்னும் இளைஞரும் காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், மாயமாகிவிட்டார்.
அவரைக் கைது செய்ய கனடா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பின், வியாழக்கிழமையன்று, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில், ரொரன்றோவிலுள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியுள்ளார் சிங்.
அங்கு தயாராக இருந்த பொலிசார் சிங்கைக் கைது செய்துள்ளார்கள். காவலில் அடைக்கப்பட்டுள்ள சிங்கை விரைவில் மனித்தோபா கொண்டு வர இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.