கனடாவில் அதிகரித்துவரும் இனவெறுப்பு: நாடாளுமன்ற உறுப்பினரும் தப்பவில்லை
கனடாவில் இனவெறுப்பு எந்த அளவுக்கு அதிகரித்துவருகிறது என்பதற்கு ஆதாரமாக சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்!
இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்தீப் க்ரேவால் (Hardeep Grewal), ஞாயிற்றுக்கிழமையன்று தனது குடும்பத்துடன் Muskoka என்னுமிடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்..
ஹர்தீப், ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்தின் உறுப்பினராக உள்ளார்.
குடும்பத்துடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹர்தீப்பை நோக்கி அவ்வழியே வந்த ஒருவர், ஏ தலைப்பாகைத் தலையா, உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என்று சத்தமிட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுள்ளார்.
மற்றொரு நபரோ, நீங்களெல்லாரும் சாகவேண்டும் என்று கூறியுள்ளார். ஆக, இனவெறுப்புக்கு எதிரான போராட்டம் முடியவில்லை என்பதை அப்பட்டமாக உணர்ந்தேன் என்கிறார் ஹர்தீப்.
சமூக ஊடகமான எக்ஸில் தான் சந்தித்த வேதனைக்குரிய விடயம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ள ஹர்தீப், என் சீக்கிய சகோதர சகோதரிகளே, கவனமாக இருங்கள், பெருமையுடன் இருங்கள், உறுதியாக இருங்கள், வன்முறை வென்றதாக சரித்திரமே இல்லை, நல்லெண்ணமே வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான, குறிப்பாக, இந்தியர்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகரித்துவருவதற்கு ஆதாரமாக பல சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.
சமீபத்தில், Mississauga நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றின் அருகில், தெளிவாகத் தெரியும் ஒரு இடத்தில், இந்திய எலிகள் என பெரிய எழுத்துக்களில் பெயிண்ட் மூலம் எழுதப்பட்டிருந்தது.
விடயம் என்னவென்றால், ஒரு கனேடிய அரசியல்வாதி கூட, இந்த விடயங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை!