கனடாவில் நச்சுவாயுவை சுவாசித்த இந்திய இளைஞர் உயிரிழப்பு
கனடாவில், காரில் உட்கார்ந்திருந்த இந்திய இளைஞர் ஒருவர், நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரூபக் சிங் (25). சில ஆண்டுகளுக்கு முன் கல்வி விசாவில் கனடாவுக்கு வந்துள்ளார் சிங்.
நேற்று இரவு, பிராம்ப்டனில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு தாமதமாக வந்த சிங், கேரேஜில் காரை நிறுத்திவிட்டு, காருக்குள் அமர்ந்தபடியே மொபைலில் தன் பெற்றோரை அழைத்து அவர்களிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
குளிர் காரணமாகவோ என்னவோ, கார் எஞ்சினை அணைக்காமலே, மொபைலில் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார் சிங்.
கேரேஜ் கதவு மூடியிருக்க, காரிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடின் அளவு காருக்குள் அதிகரித்துள்ளது.
அதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு காருக்குள்ளேயே உயிரிழந்துவிட்டிருக்கிறார் சிங்.
இந்த துயர சம்பவம், சிங் குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.