அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்: மேலுமொரு இந்திய வம்சாவளி படுகொலை!
அமெரிக்கா - வாஷிங்டனில் மர்ம நபரால் 41 வயது நிரம்பிய இந்திய வம்சாவளி நிர்வாகி விவேக் தனேஜா, கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டைனமோ டெக்னாலஜிஸ் இணை நிறுவனரான தனேஜாவுக்கும், அந்த நபருக்கும் இடையே கடந்த 2-ம் திகதி 15வது தெருவின் 1100வது பிளாக்கில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த நபர் தனேஜாவை கடுமையாக தாக்கி கீழே தள்ளியிருக்கிறார்.
இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவரை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் தகவல் கொடுத்தால் அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த ஆண்டில் 4 இந்திய மாணவர்கள் இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.