கனடாவில் ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்று உயிரிழந்த இந்திய இளைஞர்
கனடாவில், ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்று உயிரிழந்த இந்திய இளைஞரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 6ஆம் திகதி மாலை, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops நகரில், தாம்ஸன் நதிக்கு அருகே பந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார் இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஜதின் (Jatin Garg, 27).
அப்போது பந்து ஆற்றில் விழ, பந்தை எடுக்க முயன்ற ஜதினை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. அவரைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று, McArthur தீவுக்கருகே ஜதினுடைய உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஒரு நல்ல எதிர்காலத்துக்காக கனடாவுக்கு கல்வி கற்க வந்த தங்கள் பிள்ளை சடலமாக ஊர் திரும்புவதை அறிந்து அவரது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.