மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர், கூரிய பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்துக்கொள்வதை அவதானித்த கல்லடிப் பாலத்தில் கடமையிலிருந்த பொலிஸார், உடனடியாகச் செயற்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

இருப்பினும், கழுத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தினால் கல்லடிப் பாலத்தில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.