இந்தியாவில் ஸ்டார்லிங்கை முடக்க சில பணக்காரர்கள் முயற்சி ; எலான் மஸ்க் குற்றச்சாட்டு
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் நிறுவனம், மொபைல் தொலைபேசி சிக்னல் கிடைக்காத பகுதிகளுக்கும் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு பூர்வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில ஒப்புதல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர், இந்தியாவுக்கு ஸ்டார்லிங்க் சேவை தேவை எனக் குறிப்பிட்டு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், இந்தியாவில் உள்ள 11,256 கிராமங்களில் 4ஜி இணைய சேவை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பதிவுக்கு பதிலளித்த எலான் மஸ்க், இந்திய மக்களுக்கான தங்களது ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள சில பணக்காரர்கள் ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் செயல்படுவதைத் தடுக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அவ்வாறு செயற்படுபவர்கள் யார் என்பதை மக்கள் ஊகித்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்ட அவர், இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எலான் மஸ்க்கின் இந்தக் கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.