85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்: எங்கிருந்தோ வந்த தோட்டாவினால் பலியான முதியவர்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பர்னபி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் சந்தேகத்திற்குரிய வாகனம் தப்பிச் சென்றதுடன், ஆரம்பக்கட்ட சோதனையில் காயமடைந்தவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.

எனினும், அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அருகே உள்ள குடியிருப்பில் வசிக்கும் முதியவரின் நலன் குறித்து விசாரிக்க பொலிஸார் சென்றுள்ளனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 85 வயதான சாங் யோங் சோ என்ற முதியவர் துப்பாக்கிக் காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தவறுதலாக பாய்ந்து வந்த தோட்டாவே இவரைத் தாக்கியுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தில் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் ஒருங்கிணைந்த கொலை விசாரணைப் படை உறுதி செய்துள்ளது.
இச்சம்பவம் கும்பல் மோதலோ அல்லது போதைப்பொருள் தொடர்பானதோ அல்ல என்றும், தனிப்பட்ட தகராறே இதற்குக் காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள், பொலிஸாரைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 12:30 மணி முதல் 2:00 மணி வரை 18th and Humphries avenues பகுதிகளில் பயணித்தவர்களிடம் டேஷ்கேம் அல்லது பாதுகாப்பு கேமரா பதிவுகள் இருந்தால், 1-877-551-4448 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.