இஸ்ரேலில் அரசியல் இழுபறி ; நெதன்யாகு, எதிர்க்கட்சிக் கூட்டணி இடையே கடும் போட்டி
இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கூட்டணிக்கும், காடி ஐசன்காட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 61 இடங்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தம் 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் எந்தவொரு கூட்டணியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத அரசியல் சூழல் உருவாகியுள்ளது.

இந்தத் தேர்தலில் முக்கிய திருப்பமாக, இஸ்ரேலிய அரபு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 19 இடங்களைக் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆட்சியமைப்பதில் இந்தக் கட்சிகள் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்ஸாக், நாட்டில் மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில், அரசியல் கட்சிகள் பரஸ்பர விட்டுக்கொடுப்புகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, அரபுக் கூட்டமைப்பின் தலைவர் யூசுப் ஜபாரீன், நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
எனினும், காஸா போர் மற்றும் ஆக்கிரமிப்பு விவகாரங்கள் காரணமாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் நேரடியாக இணைவதற்கு அவர் தயக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இஸ்ரேலில் தேர்தல் தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் குறித்த விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நலன்களுக்காக நாட்டின் பாதுகாப்பைப் பயன்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்காட் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை எந்தக் கூட்டணியும் பெற்றுக்கொள்ள முடியாத சூழலில், அரபுக் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இஸ்ரேலின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.