ஈரான் விவகாரத்தில் தலையிட்டால் அமெரிக்காவிற்கு அழிவு ; ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் அதிரடி பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் ஒருவருக்கொருவர் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ள நிலையில், ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் தற்போது மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானில் அமைதியான முறையில் போராடுபவர்களை ஈரான் அரசு "வன்முறையாகக் கொன்றால்", அமெரிக்கா அவர்களைக் "காப்பாற்ற வரும்" என்று ஜனாதிபதி ட்ரம்ப் தனது பதிவொன்றில் எச்சரித்துள்ளார்.
ஈரானிய நாணயமான 'ரியால்' (Rial) மதிப்பிழப்பால் உருவான இந்தப் போராட்டங்களில் இதுவரை குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். "நாங்கள் ஆயத்த நிலையில் தயாராக இருக்கிறோம்" என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஈரானின் தேசியப் பாதுகாப்பு பேரவையின் செயலாளர் அலி லாரிஜானி, ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால் அது பிராந்தியம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், அமெரிக்க நலன்கள் அழிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் அலி ஷாம்கானி கூறுகையில், "ஈரானின் பாதுகாப்பிற்கு அருகில் வரும் எந்தவொரு தலையீடும் ஒழிக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் காசா போன்ற பகுதிகளில் அமெரிக்கா மேற்கொண்ட 'மீட்பு நடவடிக்கைகளின்' கசப்பான அனுபவத்தை ஈரான் மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறை காவலில் இருந்த மஹ்சா அமினி உயிரிழந்த பிறகு ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய போராட்டமாக இது கருதப்படுகிறது. தற்போதைய போராட்டங்களுக்கு பொருளாதார சரிவே முக்கிய காரணமாகும்.
தற்போது ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு சுமார் 1.4 மில்லியன் ஈரானிய ரியால்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகக் கூறினாலும், பொருளாதாரச் சரிவைத் தடுக்க தம்மால் அதிகம் செயற்பட முடியாது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேசமயம், கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுடனான 12 நாள் போரின் போது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை மீண்டும் கட்டியெழுப்பக் கூடாது என ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.