கனேடிய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது
கனடா அரசு வெளிநாட்டவர்களுக்கு விதித்த கடும் கட்டுப்பாடுகள், கனடாவைக் கைவிட சர்வதேச மாணவர்களைத் தூண்டியுள்ளன எனலாம்.
ஆம், கனேடிய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, கனேடிய பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பான Universities Canada என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர், 2024ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையை 35 சதவிகிதம் குறைக்க இருப்பதாக, ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.
சர்வதேச மாணவர்களால் கனேடியர்களுக்கு வீடுகள் தட்டுப்பாடு, மருத்துவம் முதலான சேவைகளில் அழுத்தம் அதிகரிப்பதால் இந்த முடிவை எடுக்க இருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.
ஆனால், கனடா அரசு குறைக்க இருப்பதாக அறிவித்திருந்த அளவை விட, கனடாவில் கல்வி கற்பதற்காக விண்ணப்பிக்கும் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டதாக கனடா பல்கலைக்கழகங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கனடா பல்கலைக்கழகங்கள் அமைப்பின் தலைவரான கேப்ரியல் மில்லர் கூறும்போது, சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அரசு எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் நிதிப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
சர்வதேச மாணவர்களுக்கு அரசு விதித்த கட்டுப்பாடு, அவர்களுக்கு எதிர்காலம் குறித்த உறுதியற்ற நிலைமையை உருவாக்கிவிட்டதாகவும், அதனால் அவர்கள் வேறு நாடுகளில் கல்வி கற்பதென முடிவு செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.