கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி
கனடாவில் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், தாங்கள் தகுதியானதாக நம்பி பயின்ற கல்வித் திட்டங்களை நிறைவு செய்த பின்னரும், பட்டப்படிப்புக்குப் பிந்தைய வேலை அனுமதிப் பத்திரம் மறுக்கப்பட்டதாக தெரிவித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
தாங்கள் அனைவரும் 2026 ஜூன் 24-ஆம் திகதிக்கு முன்பே விண்ணப்பங்களை முழுமையாகச் சமர்ப்பித்திருந்தனர்.
ஆனால் அதே நாளில் கனடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் அலுவலகம் தனது இணையதள வழிகாட்டுதலை புதுப்பித்து, "Non-credit" கல்வித் திட்டங்களை முடித்தவர்களுக்கு பொதுவாக PGWP வழங்கப்படாது என்று தெளிவுபடுத்தியது.
இதனால், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது நியாயமற்றது என்று மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Portage Students Union அமைப்பு, நாடு முழுவதும் சுமார் 1,500 பட்டதாரிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.
அவர்கள் அரசிடம் அவசர மறுபரிசீலனை நடத்தவும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் திறந்து நியாயமான முடிவெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்கரியைச் சேர்ந்த குடிவரவு சட்டத்தரணி லோரா-அன் கோல்டிங், தனது அலுவலகத்திலேயே 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் வழக்குகள் தற்போது கையாளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மாணவர்கள் மறுபரிசீலனை கோருவதோடு, நீதிமன்றத்தில் நீதித்துறை மீளாய்வு கோரியும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
இந்நிலையில், பட்டப்படிப்புக்குப் பிந்தைய வேலை அனுமதிப் பத்திரம் வழங்கும் தகுதி விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட இணையதள புதுப்பிப்பு ஏற்கனவே இருந்த விதிமுறைகளை தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் குடிவரவு மற்றும் ஏதிலிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த விளக்கம் மாணவர்களின் அதிருப்தியை தணிக்கவில்லை. தங்களது எதிர்காலத்தை கனடாவை நம்பி திட்டமிட்ட ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.