துபாய் கடற்பரப்பில் மிகப்பெரிய எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்; அச்சத்தில் உலக நாடுகள்!
துபாய் கடற்பரப்பில் திங்களன்று (30) மசகு எண்ணெய் நிரம்பியிருந்த ஒரு கப்பலை ஈரான் தாக்கியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஈரான், ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், அதன் எரிசக்தி ஆலைகளையும் எண்ணெய் கிணறுகளையும் அமெரிக்கா அழித்துவிடும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, ஹார்முஸ் வளைகுடா மற்றும் நீரிணையில் ஏவுகணைகள் அல்லது வெடிகுண்டு வீசும் வான் மற்றும் கடல் ட்ரோன்கள் மூலம் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் அண்மைய நிகழ்வு இதுவாகும்.
ஒரு மாதத்துக்கும் காலமாக நீடித்து வரும் இந்த மோதல், உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய விலையில் 200 மில்லியன் டொலருக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் செல்லக்கூடிய அந்த எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதல் குறித்து குவைத்தின் அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் சிறிது நேரம் உயர்ந்தன.
சேதத்தை மதிப்பிடும் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருவதாகவும், எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கப்பலின் உரிமையாளரான குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் எச்சரித்தது.
துபாய் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளதுடன் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.