அமெரிக்காவின் மிக இரகசியமான உளவு வானூர்தி அழிக்கப்பட்டது எப்படி? ; மத்திய கிழக்கில் புதிய திருப்பம்
சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் (Prince Sultan) வானூர்திப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலில், அமெரிக்க வானூர்திப்படையின் மிக முக்கியமான E-3G Sentry AWACS உளவு வானூர்தி ஒன்று முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 27 அன்று நடைபெற்ற இந்தத் தாக்குதலில், வான்பரப்பைக் கண்காணிக்கும் 'பறக்கும் ரேடார்' என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன வானூர்தி இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு வெளியான புகைப்படங்களில், வானூர்தியின் பின்புறமுள்ள ரேடார் பகுதி (Radar Dome) முற்றிலும் சிதைந்துள்ளதைக் காண முடிகிறது.
இந்தத் தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைவீரர்கள் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
மேலும், வானூர்திகளுக்கு எரிபொருள் நிரப்பும் பல KC-135 Stratotanker வானூர்திகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிடம் தற்போது செயல்பாட்டில் உள்ள மிகச் சில E-3G ரக வானூர்திகளில் இதுவும் ஒன்று என்பதால், இந்தப் போர்ச் சூழலில் அமெரிக்காவின் வான்வெளி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புத் திறனில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.