ஈரான் போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு இன்று மரண தண்டனை; மனித உரிமைகள் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு
ஈரான் தலைநகரான தெஹ்ரான் அருகே உள்ள கராஜ் பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட எர்பான் சொல்தானி என்ற 26 வயதுடைய நபருக்கு இன்று (14) அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் எந்தவிதமான முறையான விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் உட்பட பல்வேறு தரப்புகள் சர்வதேச அளவில் குரல் கொடுத்து வருகின்றன.

சர்வதேச சமூகத்துக்கு ஈரான் அமைப்புகளும் அழைப்பு
இது தொடர்பாக நோர்வே நாட்டை அடிப்படையாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட செய்தியில்,
எர்பானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அதன்படி, ஜனவரி 14ஆம் திகதி எர்பானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுகிறது.
அத்துடன் ஈரானின் விடுதலைக்காக குரல் கொடுத்தது மட்டுமே எர்பான் செய்த குற்றம் என கூறி, அவரது மரண தண்டனையை தடுத்து நிறுத்தும்படி சர்வதேச சமூகத்துக்கு ஈரானின் பல்வேறு உரிமை அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன்ன.