ஈரான் ஜனாதிபதிக்கு வந்த சோதனை ; நடுவழியில் பழுதடைந்து நின்ற பாதுகாப்பு வாகனங்கள்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனின் பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் பழுதானதால், அவர் டாக்ஸி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அந்நாட்டின் தர்பிஸ் நகரத்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, கஸ்வின் மாகாணத்தின் டகேஸ்தான் நகரத்தின் அருகில் வந்தபோது, அவரது 3 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் பழுதடைந்து நின்றதாகக் கூறப்படுகிறது.
கலப்பட எரிபொருள்
இதனைத் தொடர்ந்து, அம்மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உதவியைப் பெற விரும்பாமல், அதிபர் பெசெஷ்கியன், அங்குச் செயல்படும் தனியார் டாக்ஸியில் தனது மீதி பயணத்தைத் தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அதிபரின் 3 பாதுகாப்பு வாகனங்களுக்கும், ராஷ்ட் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் நிரப்பட்டதும், அந்த எரிபொருளில் தண்ணீர் கலந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, வெளியான செய்திகளில், அதிபர் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையத்தின் மீது, தண்ணீர் கலக்கப்பட்ட கலப்பட எரிபொருள் விற்பனைச் செய்யப்படுவதாக பலமுறை புகாரளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஈரானின் பல்வேறு நகரங்களில் தண்ணீர் கலக்கப்பட்டு, கலப்பட மற்றும் போலியான எரிபொருள்கள் விநியோகிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதிபர் வாகனங்களே அதனால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.